சுவாமி ஐயப்பனைப் பற்றி

சுவாமி ஐயப்பன் – பிறப்பும் வரலாறும்

     திருமலை நாயக்கரால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பாண்டிய அரசவம்சத்தினர் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் வழியாகக் கடந்துவந்து வள்ளியூர், தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில்,  சிவகிரி போன்ற இடங்களில் குடியேறினர். அன்றைய திருவிதாங்கூரின் சில பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும் செய்தனர். சிவகிரியில் செம்பழனாட்டு கோயிலைச் சார்ந்த பாண்டிய வம்சத்தினாராகிய சிலருக்கு பந்தள நாட்டை ஆள்வதற்கான உரிமையைத் திருவிதாங்கூர் மன்னர் அளித்தார். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையான இராஜசேகர மன்னர் இவ் வம்சத்தைச் சார்ந்தவராவார்.

     நீதியும் நேர்மையும் தவறாது ஆட்சிபுரிந்த மன்னன் இராஜசேகரனின் ஆட்சியை மக்கள் மிகவும் விரும்பினர். அவரது ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்றே பலரும் குறிப்பிட்டனர். ஆனாலும் மன்னருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தனக்கு வாரிசாக ஒரு குழந்தை இல்லையே என்ற வருத்தம். எனவே மன்னரும் மகாராணியும் ஒரு குழந்தைக்காகப் பகவான் பரமேஸ்வரனிடம் மனமுருகி வேண்டினர்.

     அதே நேரம் அசுரகுலத்தில் பிறந்த மஹிசாசுரன் என்பவன் கடும் தவம் புரிந்து பிரம்மதேவனிடமிருந்து ஓர் வரத்தைப் பெற்றான். பூமியில் எவராலும் அவன் கொல்லப்படக்கூடாது என்பதுதான் அந்த வரம். பிரம்மனிடமிருந்து பெற்ற வரத்தின் சக்தியால் அவன் கண்ணில் கண்டவர்களையெல்லாம் துன்புறுத்தத் தொடங்கினான். அவனது அட்டகாசத்திற்கும் அடக்குமுறைக்கும் பயந்து அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்லும் நிலைக்கு ஆளாயினர். ஓர் அதிமானுஷ்ய சக்தியால் மட்டுமே மஹிசாசுரனைக் கட்டுப்படுத்த முடியும் என்று கருதிய தேவர்கள் துர்கா தேவியிடம் முறையிட்டனர். அவள் அவனை ஒரு கடும்போரில் கொன்றாள்.

     தன் சகோதரன் மஹிசாசுரனின் மரணத்தில் மிகவும் வருத்தமுற்ற மஹிஷி, எப்படியும் பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்று திட்டமிட்டாள். அவளும் கடுந்தவம் புரிந்து பிரம்மனிடமிருந்து வரம் பெற்றாள். விஷ்ணுவுக்கும் (ஹரி) சிவனுக்கும் (ஹரன்) மகனாகப் பிறந்த ஒரு குழந்தையால் அல்லாது, பிறர் எவராலும் தனக்கு மரணம் உண்டாகக் கூடாது என்பதுதான் அந்த வரம். சில காலம் கழிந்து மஹிஷி தேவலோகம் சென்று, தன் சகோதரனின் மரணத்திற்குக் காரணமான தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினாள். இதனால் அச்சம் கொண்ட தேவர்கள் விஷ்ணு பகவானிடம் சென்று தங்கள் நிலையை எடுத்துக் கூறி, மஹிஷியின் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற வேண்டினர். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மகனாகப் பிறந்த ஒருவரால் மட்டுமே மஹிஷியைக் கொல்லமுடியும் என்பதை அறிந்து, பகவான் விஷ்ணு பெண்ணுருவம் கொண்டு ஒரு மோகினியாக மாறினார். சிவனுக்கும் மோகினிக்கும் பிறக்கப்போகும் ஆண்குழந்தையை, ஒரு குழந்தைக்காக ஏங்கும் பந்தள மன்னர் இராஜசேகரனிடம் சேர்க்கவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.  

     ஒருநாள் பம்பை நதிக்கரையில் காட்டில் வேட்டையாடச் சென்ற இராஜசேகர மன்னன், இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தான். அந்நேரம் அக் காட்டில் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. உடனே மன்னர் அழுகை வரும் திசையை நோக்கி நடந்தார். அங்கே தரையில் அழகான ஓர் ஆண் குழந்தை. அது தன் கைகால்களை ஆட்டிக்கொண்டு கிடந்தது. மன்னர் சிறிது நேரம் ஒருவித மனக்கலக்கத்துடன் அங்கேயே நின்றுவிட்டார். பின்னர் ஆவலோடு  அக்குழந்தையை எடுத்தார். அரண்மனைக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்.

     மன்னர் இராஜசேகரன் தெய்வீக அம்சம் தெரிந்த அக் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், எங்கிருந்தோ வந்த  முனிவர் ஒருவர் அவர்முன் தோன்றினார். மன்னரைப் பார்த்து அக் குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். மேலும், “இந்தக் குழந்தை உங்கள் அரச வம்சத்தின் கவலைகளை நீக்கும். குழந்தை பன்னிரண்டு வயதை அடையும்போது அவனது தெய்வீகக் குணம் வெளிப்படும். அதை நீ உணர்வாய். குழந்தையின் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியில் ஒரு மணி கிடக்கின்றது. எனவே இக் குழந்தைக்கு ‘மணிகண்டன்’ எனப் பெயரிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்றும் முனிவர் மன்னரைப் பார்த்துக் கூறினார்.

     மகிழ்ச்சிவெள்ளத்தில் மூழ்கிய இராஜசேகரன் மணிகண்டனை எடுத்துக்கொண்டு அரண்மனையை அடைந்தார். நடந்ததையெல்லாம் தன்மனைவி மகாராணிக்கு எடுத்துரைத்தார். இருவரும் பகவான் பரமேஸ்வரன் தங்கள் வேண்டுதலைக் கேட்டு அருள்புரிந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அரண்மனையில் அனைவரும் அரச குடும்பத்தின் மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். ஆனால் அமைச்சர் மட்டும் சோகத்தில் ஆழ்ந்தார். மன்னனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தால் தனக்கு அடுத்த மன்னர் ஆகலாம் என்று கருதியிருந்த அவருக்குக் குழந்தையின் வருகை ஏமாற்றத்தைக் கொடுத்தது.

     குழந்தைப் பருவத்திலேயே மணிகண்டன் மிகுந்த ஆற்றலும் அறிவும் உடையவனாகக் காணப்பட்டான். கலையிலும் சாஸ்திரத்திலும் சிறந்து விளங்கினான். அவனுடைய அமானுஷ்ய ஆற்றலையும் அறிவையும் கண்டு அவனது குருவே அதிசயித்துப்போனார். பந்தள நாட்டில் அமைதியும் வளமும் செழித்தோங்கியது. “ஐயப்பன் ஒரு சாதாரணக் குழந்தை அல்ல. அவன் தெய்வத்தன்மை வாய்ந்தவன்” என்று ஐயப்பனின் குருதேவர் அரசனுக்கு எடுத்துரைத்தார். தனது படிப்பும் பயிற்சியும் நிறைவடைந்தபின் மணிகண்டன் குருதட்சிணை வழங்கி, ஆசி பெறுவதற்காகத் தன் குருவிடம் சென்றான்.

     மணிகண்டன் ஆசி பெற குருவின் பக்கத்தில் சென்றதும், குரு அவனைப் பற்றி ஊகித்து அறிந்தவற்றை எடுத்துச் சொன்னார். அவனிடம் தெய்வீகத்தன்மையும் அமானுஷ்ய ஆற்றலும் இருப்பதாகக் கூறினார். பின்னர் மணிகண்டனை நோக்கி, ஊமையும் குருடுமாக இருக்கின்ற தன் மகனுக்குப் பேச்சாற்றலும் பார்வையும் அருளுமாறு வேண்டினார். மணிகண்டன் தனது இரு கைகளையும் குருவின் மகன்மீது வைத்தான். என்ன ஆச்சரியம்! அடுத்த கணமே குருவின் மகனுக்குக் கண்பார்வை கிடைத்தது, பேசவும் முடிந்தது. பின்னர் மணிகண்டன் குருவை நோக்கி, ”நடந்த இந்த அற்புதத்தை எவரிடமும் சொல்லக்கூடாது” என்று வேண்டிக்கொண்டு, அரண்மனைக்குத் திரும்பினான்.

     இவ்வாறிருக்க மகாராணி கருவுற்று, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு ராஜராஜன் எனப் பெயர் சூட்டப்பட்டது. மனிகண்டனின் வருகையால்தான் தனக்கு எல்லா நன்மைகளும் கிடைத்ததாகக் கருதிய மன்னன் ராஜசேகரன், தனது வாரிசாக மணிகண்டனுக்கு முடிசூட்ட நினைத்தார். செய்தி எல்லோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த அரசனாக வர ஆசைப்பட்ட அமைச்சர் மட்டும் அதை விரும்பவில்லை. மணிகண்டனை எப்படியும் ஒழிக்கத் திட்டமிட்டு, அதற்காகப் பல வழிகளை மேற்கொண்டார். ஒருமுறை மணிகண்டனின் உணவில் விஷத்தையும் கலந்துவிட்டார். ஆனால் எல்லா கெடுதல்களிலிருந்தும் மணிகண்டன் எப்படியோ தப்பித்துக்கொண்டான். ஆனாலும் குணப்படுத்த முடியாத காயத்திற்கு உள்ளானான் மணிகண்டன். அந்நேரம் சிவபெருமான் மணிகண்டனைக் காப்பாற்றினார்.

     தனது திட்டங்கள் எதுவும் பலிக்காததால் ஏமாற்றமடைந்த அமைச்சர், மகாராணியை சந்தித்து, “அம்மையே, உங்களுக்குப் பிறந்த மகன் ராஜராஜன் உயிரோடு இருக்கும்போது எங்கிருந்தோ வந்த மணிகண்டனுக்கு முடிசூட்டுவது முறையல்ல” என்று கோள்மூட்டினார். அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டார் மகாராணி. மகாராணி நோய்வாய்ப்பட்டதுபோல் கிடக்கவேண்டும் என்றும், புலிப்பாலால் மட்டுமே இந்நோயைக் குணப்படுத்த முடியுமென்று அரண்மனை வைத்தியரைக்கொண்டு சொல்லவைக்கலாம் என்றும், புலிப்பாலுக்காக மணிகண்டனைக் காட்டிற்கு அனுப்பவேண்டும் என்றும், அங்கு வைத்து கொடிய விலங்குகளுக்கு மணிகண்டன் இரையாகிவிடுவான் என்றும், பின்னர் ராஜராஜனே இளவரசன் ஆவான் என்றும் தமது சூழ்ச்சியை ரகசிமாகச் சொன்னார் அமைச்சர். தமது சொந்த மகனின் மீது கொண்டிருந்த அளவற்ற பாசத்தால், மகாராணி அமைச்சரின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டாள். திட்டம் நிறைவேறினால் அமைச்சருக்கு உதவுவதாகவும் கூறினாள். பின்னர் தனக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டிருப்பதாக மன்னரிடம் கூறினாள். அதை உண்மையென நம்பிய மன்னர் அரண்மனை வைத்தியர்களை அழைத்து, மகாராணியின் தலைவலி நீங்க என்ன செய்யலாம் என்று கேட்டார். அந்நேரம் அமைச்சரின் சூழ்ச்சிக்கு அகப்பட்ட வைத்தியர் ஒருவர், “கொஞ்சம் புலிப்பால் கிடைத்தால் நோயைக் குணப்படுத்தலாம்” என்று கூறினார். மகாராணியின் நோயைக் குணப்படுத்துகின்றவர்களுக்கு தமது அரசாட்சியின் பாதியை வழங்குவதாக மன்னர் அறிவித்தார்.

     புலிப்பால் கொண்டுவர, படைவீரர்களின் ஒரு குழுவை மன்னர் ராஜசேகரன் காட்டிற்கு அனுப்பினார். ஆனால் அவர்களோ வெறுங்கையுடன் திரும்பினர். அந்நேரம் மணிகண்டன், தான் உதவுவதாகக் கூறினான். அவன் சிறுவனாக இருப்பதாலும், அடுத்து முடிசூட இருப்பதாலும் அவனைக் காட்டிற்கு அனுப்ப மன்னர் தயாராகவில்லை. மணிகண்டனோ மிகவும் அமைதியாக, தன்னைக் காடு சென்று புலிப்பால் கொண்டுவர அனுமதிக்கவேண்டுமென்றும், தனக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படாது என்றும், தன்னுடன் ஆற்றல்மிக்க சில படைவீரர்களை அனுப்பினால் போதுமென்றும் வேண்டினான். இறுதியில் மணிகண்டனின் வேண்டுகளுக்கு இணங்கி அவனைக் காட்டுக்கு அனுப்பி வைத்தார் மன்னன் ராஜசேகரன். மேலும், தேவையான உணவையும் சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு முக்கண்களையுடை சில தேங்காய்களையும் எடுத்துச் செல்லுமாறு கூறினார்.

     பகவான் சிவபெருமானின் பஞ்சபூதங்கள் மணிகண்டனுக்குப் பாதுகாப்பாகப் பின்தொடர்ந்து சென்றன. செல்லும் வழியில் இன்னொரு கொடுமையைக் காணவேண்டியதாயிற்று. தேவர்களைப் பழிவாங்க நினைத்த மஹிஷி என்னும் அரக்கி தேவலோகத்தில் தேவர்களை மிகவும் துன்புறுத்திக்கொண்டிருந்தாள். தனது ஆற்றலால் மணிகண்டன் அவளை வேகமாக பூலோகத்தில் தூக்கி எறிந்தான். அவள் அழுதயாற்றின் கரையில் வந்து விழுந்தாள். அங்கே கடுமையான ஒரு போர் நடந்தது. முடிவில் மஹிஷி வீழ்ந்தாள். அவளது மார்பில் மிதித்துக்கொண்டு தாண்டவமாடினான் மணிகண்டன். தேவலோகமும் பூலோகமும் அதிர்ந்தன. தேவர்கள் அச்சம் கொண்டார்கள். தன்னை மிதித்துக்கொண்டு நடனமாடும் இளைஞன் ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்த மகன்தான் என்பதை மஹிஷி உணர்ந்தாள். அவள் மணிகண்டனை வணங்கினாள். உயிர் பிரிந்தது.

     மஹிஷியை வென்று மணிகண்டன் ஆடிய நடனத்தை பரமேஸ்வரனும் மஹாவிஷ்ணுவும் காளகெட்டி என்னும் இடத்தில் நின்று பார்த்தனர். (கரம்பன் என்பவனின் மகள்தான் எருமை முகம்கொண்ட மஹிஷி எனச் சொல்லப்படுகிறது. அவள் தோற்கடிக்கப்பட்டபின், அவளது வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீதர்ம சாஸ்தா அவளுக்கு மோட்சம் அளித்ததாகவும், அவளே மாளிகைப்புறத்து அம்மை என்ற பெயரில் சபரிமலையில் கோயில் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது).

     மஹிஷியை வதைத்தபின் மணிகண்டன் புலிப்பாலுக்காக அடர்ந்த காட்டிற்குள் புகுந்தான். அங்கே சிவபெருமான் அவனுக்கு தரிசனம் கொடுத்தார். மணிகண்டன் தனது பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டான் என்றாலும், மேலும் சில துயரங்கள் இருப்பதாக சிவபெருமான் எடுத்துரைத்தார். அவனது தாயும் தந்தையும் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறினார். புலிப்பால் சேகரிக்க இந்திரனின் உதவி கிடைக்குமென்றும் உறுதியளித்தார். பின்னர் தேவேந்திரனும் தேவலோகத்து ஆண்களும் பெண்களும் ஆண், பெண் புலிகளாக உருமாறி வந்தனர். மணிகண்டன் பெண்புலியாக வந்த தேவேந்திரனின் மேல் ஏறிக்கொண்டு, பிற புலிகள் பின்தொடர அரண்மனையை நோக்கிப் பயணமானான்.

     புலிகள் புடைசூழ வந்துகொண்டிருக்கும் மணிகண்டனைக் கண்டதும் பந்தளநாட்டு மக்கள் அச்சத்தால் ஓடி ஒளிந்துகொண்டனர். புலிகளுடன் மணிகண்டன் அரண்மனை வாயிலை அடைந்ததும், என்ன செய்வதென்று தெரியாமல் ஆச்சரியத்துடன் அப்படியே நின்றுவிட்டார் மாமன்னர். அந்நேரம் காட்டில் வைத்து மன்னனை சந்தித்த முனிவர் மீண்டும் தோன்றி மணிகண்டனின் திவ்ய சக்தியை வெளிப்படுத்தினார். மணிகண்டன் புலியின் மேலிருந்து கீழே இறங்கி, மன்னனை நோக்கி, ”தந்தையே ஒரு பெண்புலியைக் கொண்டுவந்துள்ளேன், அப்புலியிடமிருந்து புலிப்பால் கறந்து தாயின் நோயை நீக்கலாம்” என்று கூறினான். அக்கணமே சிறுவன் மணிகண்டனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் மன்னர் ராஜசேகரன். மகாராணியின் பாசாங்கு வெளிப்பட்டது. அதன்பின் மணிகண்டன் அங்கே தங்க விரும்பவில்லை. உடனடியாகக் காட்டிற்குச் செல்லத் தீர்மானித்தான். அப்போது மணிகண்டனுக்கு வயது பன்னிரண்டு.

     அரண்மனையில் நடந்த எல்லா சூழ்ச்சிகளுக்கும் காரணம் அமைச்சர்தான், தன் மகன் காட்டிற்குச் செல்லவும் அவனே காரணம் என்பதையெல்லாம் அறிந்த மன்னர் அமைச்சருக்குத் தண்டனை கொடுக்கத் தீர்மானித்தார். ஆனால் மணிகண்டன் அவ்வாறு செய்யவேண்டாம் என உபதேசித்தான். எல்லாம் கடவுளின் நிச்சயப்படியே நடந்துள்ளன என்றும் கூறினான். தனது பிறப்பு எதற்காக நிகழ்ந்ததுவோ அது நிறைவேறிவிட்டது என்றும் அதனால் தான் தேவலோகம் செல்லப் போவதாகவும் கூறினான். மன்னன் தன்னிடம் மிகுந்த அன்பும் பாசமும் காட்டி வளர்த்ததாகவும், அதனால் அவருக்கு என்னவரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றான். உடனேயே மன்னன் ராஜசேகரன், மணிகண்டனுக்கு ஒரு கோயில் கட்ட விரும்புவதாகவும், அதை எங்கே கட்டலாம் என்றும் கேட்டார். அதைக் கேட்டதும் மணிகண்டன், கையிலிருந்த அம்பு ஒன்றை எடுத்து எய்தான். அது சபரி என்னும் மலைப்பகுதியில் சென்று விழுந்தது. ஸ்ரீராமன் யுகத்தில் சபரி என்ற பெயர்கொண்ட ஒரு சன்யாசினி தவம் செய்த இடம்தான் அது. அங்கே கோயில் கட்டலாம் என்று சொல்லிவிட்டு மாயமாக மறைந்தான் மணிகண்டன்.

     பின்னர், அகத்திய முனிவரின் அறிவுரைப்படி மன்னன் ராஜசேகரன் சபரிமலையில் கோயில் எழுப்புவதற்கான அடிக்கல் நாட்டினான். குடும்ப உறவுகளிலிருந்து விடுபட்டு, உலகியல் இன்பங்களை மறந்து 41 நாட்கள் விரதம் இருந்து உண்மையான பக்தியுடன் வருகின்றவர்களுக்கு மட்டுமே தாம் தரிசனம் அளிப்பதாக மணிகண்டன் சொல்லியிருந்தான். தாம் ஒரு பிரம்மச்சாரி என்பதையும் நினைவுபடுத்தியிருந்தான். தம்மை தரிசிக்க வருகின்ற எல்லோருமே ஐயப்ப சுவாமிகள்தான் என்பதையும் சுட்டிக்காடியிருந்தான். புலிப்பாலுக்காகக் காடு சென்றபோது தேங்காயும் உணவும் எடுத்துச் சென்றதன் நினைவாகவே பக்தர்கள் அவற்றை நிறைத்துத் (இருமுடிக்கெட்டு) தலையில் சுமந்து செல்கின்றனர். பம்பையில் நீராடி சரணமந்திரங்கள் உருவிட்டுக்கொண்டு புனித பதினெட்டு படிகளையும் ஏறவேண்டும்.

     குறித்த காலத்தில் கோயிலைக் கட்டி, பதினெட்டு படிகளையும் அமைத்தான் மன்னன் ராஜசேகரன். சபரிமலை காசியைப் போலவும், பம்பையாறு கங்கையைப் போலவும் புனிதமானவை என மணிகண்டன் கூறியதை மன்னன் நினைத்துக்கொண்டான். கோயிலுக்குள் ஸ்ரீதர்மசாஸ்தாவை எவ்வாறு பிரதிஷ்டை செய்வது என்பது குறித்து சிந்தித்தான். அந்நேரம் தர்மசாஸ்தா பரசுராமனை அங்கே அனுப்பிவைத்தார். (கடலுக்கடியில் இருந்த இடத்தை மழு எறிந்து கேரளம் என்னும் நிலமாக மாற்றியவர்தான் பரசுராமன்). சபரிமலை வந்த பரசுராமன் தாமே உருவமைத்த தர்மசாஸ்தா உருவத்தை மகரசங்கிராந்தி நாளன்று (தைமாதம் முதல்நாள்) கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்தார்.

     ஸ்ரீதர்மசாஸ்தா என்னும் ஐயப்பனின் அருள் வேண்டி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதி, மதம் மறந்து, 41 நாட்கள் விரதம் இருந்து, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும், சரண மந்திரம் ஓதிக்கொண்டே, பம்பையில் நீராடி, இருமுடிக்கெட்டு தாங்கி, புனித பதினெட்டு படிகளையும் தாண்டி ஐயப்ப தரிசனம் செய்வது மிகப்பெரிய புண்ணியச் செயலாகும்.